காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரம்
ராமேஸ்வரம், டிச.31-
”காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின் காசி, தமிழ் சங்கமம் மூலம் நிறைவேறியுள்ளது” என ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த 2-ந்தேதி வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை தமிழகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டு ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
இந்த தேசம் வாழ்க என சொல்வதால், நாம் தமிழுக்கு எதிரானவர்களாக மாட்டோம். தொன்மையான காசி நகரமும், உலகின் தொன்மையான தமிழ் மொழியும் இணைவது காசி தமிழ் சங்கமம் என பிரதமர் மோடி தெரிவித்தார். காசியும், ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத புண்ணிய நகரங்கள்.
அதனால் தான் காசி தமிழ் சங்கமம் 4.0 காசியில் துவங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது. உலகின் ஆன்மிக தலைநகரான காசி, பாரதத்தின் பண்பாட்டு மையமாக உள்ளது. தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கும் தளத்தில் கபீரின் பக்தி பாடல்களும் ஒலிக்கிறது.
முகலாய மன்னர்கள் காசி கோவிலை அழித்த போது, தமிழகத்தில் இருந்தும், பாண்டிய நாட்டிலும் இருந்தும் காசியை காக்க போர் புரிய சென்றனர். நாட்டின் தன்மானத்திற்கும், தர்மத்திற்கும் பாதிப்பு வரும் போது அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
எட்டயபுரத்தில் இருந்து சென்ற மகாகவி பாரதி, காசி அரசவையை அலங்கரித்துள்ளார். அவர் தேசத்தை பற்றி மட்டும் சிந்தித்துள்ளார். இந்திய தேசம் குறித்து பாரதியார் கண்ட கனவு, பிரதமர் மோடி மூலம் நிறைவேறி வருகிறது.
அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழனின் பெருமையை, இந்தியாவின் பெருமையையும் நிலைநாட்டும் வகையில் உள்ளது. தமிழ் கலாசாரம் குறித்து பிரதமர் மோடி மக்களின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். கவர்னர் ரவி தமிழில் பேசியதை கேட்டபோது, நானும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தது.
தமிழகத்தில் யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் வர வேண்டும். உலகின் உன்னத நிலைக்கு நம் பாரதம் வர வேண்டும். பாரத தேசத்தின் உச்சத்தை தமிழகமும் தொட வேண்டும்.
எந்த இடத்தில் இருந்தாலும் அகங்காரம் கொண்டவராக இல்லாமல், மக்களில் ஒருவராக, உங்களில் ஒருவராக இருப்பேன். இன்றைக்கும், என்றைக்கும் பாரத தேசம் ஒன்று தான். இவ்வாறு அவர் பேசினார்.
நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
கலாசாரம், பண்பாட்டில் காசியும், தமிழகமும் சிறந்து விளங்குகிறது. இனிமை, அமுது, பால் என எல்லாமே தமிழாக நினைக்கும் தமிழகத்தில் யாரும் தமிழை முன்னிறுத்துவதில்லை.
பிரதமர் மோடி அயோத்தியிலும், ஐ.நா., சபையிலும் தமிழை முன்னிறுத்தி யுள்ளார். தமிழுக்காக மதுரையில் தமிழ் சங்கம் பாண்டிய மன்னன் காலத்தில் நடத்தப்பட்டது. தமிழை முன்னிறுத்தி பாண்டிய மன்னனாக பிரதமர் மோடி விளங்குகிறார்.
எல்லா மாநிலங்களிலும் தமிழகம் கற்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் பிரதமர் மோடியை புகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





