செய்திகள் நாடும் நடப்பும்

காசா போர் நிறுத்தம்: ஆபத்தான அமைதி?

Makkal Kural Official

தலையங்கம்


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 10 ந்தேதி அமலுக்கு வந்தது. ஆனால், பல மீறல்கள், குற்றச்சாட்டுகள், மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அந்த அமைதி, மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்சம் கொண்ட “பெரும் அமைதி திட்டம்” மூலம் 2 ஆண்டுகளாக நீடித்த காசா போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மறுசீரமைப்பு செய்து வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி வருகின்றனர். காசாவில் மனிதாபிமான உதவி இன்னும்கூட மிகவும் குறைவாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புகள் கூறுவதுபடி, உணவு மற்றும் மருந்து கடத்தல்கள் இஸ்ரேலின் அனுமதி தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கும்போது, ‘2 ஆண்டுகள் நீடித்த போரில் 68,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த எண்ணிக்கையை ஐ.நா. அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மனஅழுத்தம், பசியின் தாக்கம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவை அந்தப் பகுதியின் பல தலைமுறைகளுக்கும் ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளன.

2024-ஆம் ஆண்டில் தொடங்கிய இஸ்ரேல் – ஈரான் பதற்றம், 2025 ஜூன் மாதத்தில் முழுமையான 12 நாள் யுத்தமாக மாறியது. இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியது; அமெரிக்கா ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தி ஆதரவளித்தது; பின்னர், கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தால் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் தாக்கம் பெரிதும் குறைந்தது.

இதனிடையே இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத், எதிர்ப்பு கிளர்ச்சி காரணமாக பதவி விலக நேரிட்டது. ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் குறைந்து, துருக்கி புதிய சிரியாவின் அரசுடன் நெருக்கமாகி வருகிறது. ரஷ்யா, தனது தளங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக புதிய அதிபர் அஹமது அல்-ஷராவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

முக்கிய சக்தியாக அமெரிக்கா

போருக்கு முன்பு மத்திய கிழக்கில் தன்னுடைய பங்கைக் கூட்டிய சீனா, தற்போது பின்வாங்கியுள்ளது. அமெரிக்கா, புதிய ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் அந்தப் பகுதியில் முக்கிய சக்தியாக மாறியுள்ளது. இதன் விளைவாக, சீனாவின் பொருளாதார மற்றும் தூதரக செல்வாக்கு குறைந்துள்ளது.

2025 செப்டம்பரில், கத்தாரில் உள்ள தோஹா நகரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான கத்தாருடன் உறவைப் பெரிதும் பாதித்தது. இது “போரின் முடிவை நோக்கிய ஒரு திருப்புமுனை” என பலர் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் காசாவில் பஞ்சம் ஏற்பட்டதாக ஐ.நா. அமைப்பு எச்சரித்தது. செப்டம்பரில் வெளியான விசாரணை அறிக்கை, இஸ்ரேல் மீது “இனப்படுகொலை” குற்றச்சாட்டு சுமத்தியது. ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவிலும் இதே மனநிலை பரவி வருகிறது.

காசா போரின் தற்காலித நிறுத்தம், மத்திய கிழக்கில் ஒரு சிறிய நிம்மதியைக் கொடுத்திருந்தாலும், அது நீடித்த அமைதிக்கான தீர்வாக இல்லை. பிராந்திய அரசியலில் நிகழும் ஆட்சிமாற்றங்கள், புதிய கூட்டணிகளின் உருவாக்கம், பழைய உறவுகளில் எழும் பதட்டம் ஆகியவை மத்திய கிழக்கில், புதிய அரசியல் வரலாற்றின் துவக்க பக்கங்களாக இருக்கும்!.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *