செய்திகள்

காசாவில் தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்: அதிபர் டிரம்ப் தகவல்

Makkal Kural Official

வாஷிங்டன், அக்.5–

காசாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – காசா இடையிலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நடத்திய பேச்சுவார்த்தையில், காசாவுடனான போரை நிறுத்த ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, போரை நிறுத்த காசாவுக்கு டிரம்ப் 3 நாள் காலக்கெடு விதித்தார். இதனையடுத்து, காசாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட நடவடிக்கையாக காசாவின் சில பகுதிகளில் தாக்குதலை நிறுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘‘பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக காசாவில் தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினரிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம். அமைதித் திட்டத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தினால், உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்; பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *