செய்திகள்

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: கெஜ்ரிவால் திட்டவட்டம்

Makkal Kural Official

ஆமதாபாத், ஜூலை.4-–

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை என கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது.

இதனால் பின்னடைவை சந்தித்து இருந்த ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.

குறிப்பாக பஞ்சாப்பில் இடைத்தேர்தல் நடந்த ஒரு தொகுதியையும், குஜராத்தில் 2 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியையும் (விசாவதார்) ஆம் ஆத்மி கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து குஜராத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆமதாபாத் சென்றுள்ள கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. அப்படி ஏதாவது கூட்டணி இருந்தால், அவர்கள் (காங்கிரஸ்) ஏன் விசாவதார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிட்டார்கள்?

எங்களை தோற்கடிக்கவே போட்டியிட்டார்கள். ஆம் ஆத்மியின் ஓட்டுகளை பிரித்து எங்களை தோற்கடிப்பதற்காக காங்கிரசை பா.ஜ.க. அனுப்பி இருந்தது. காங்கிரஸ் தோற்றபோது பா.ஜ.க. கூட அவர்களை கண்டிக்கிறது.

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது. தற்போது எங்கள் தரப்பில் அந்த கூட்டணி இல்லை.

குஜராத்தை கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க. சீரழித்து விட்டது. ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரசும் தோல்வி அடைந்து விட்டது. ஏனெனில் அது பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கே உதவுகிறது.

விவசாயிகள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பா.ஜனதாவால் மகிழ்ச்சியில் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிய போதும், ஒவ்வொரு துறையிலும் பாதிக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. அப்படியிருந்தபோதும் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. காரணம், அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. ‘நாங்கள் பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புகிறோம், ஆனால் அவர்களுக்கு பதிலாக யாருக்கு நாங்கள் வாக்களிப்பது?’ என கேள்வி எழுப்புகிறார்கள். பா.ஜ.க.வின் பாக்கெட்டில்தான் காங்கிரஸ் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள்.

பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க அடுத்த 2½ ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் குஜராத்தில் தீவிரமாக பிரசாரம் செய்வார்கள், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வார்கள்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *