கட்டபொம்மன் –2
பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை.
வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்.
பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். பக்தி மானாகவும் இருந்துள்ளார்.
ஆங்கிலேயர்கள் வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் போது வரி கொடுக்காமலேயே மிகவும் சாதுர்யமாக தபால் அனுப்பி கொண்டே வீரபாண்டியன் கட்டபொம்மன் காலம் கடத்துகிறார்.
நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும், அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு வரியும் கொடுக்க கூடாது, என்பதற்காகவே அவர் சாதுர்யமாக தபால் அனுப்புகிறார். ஆங்கிலேயர்களை எச்சரிக்கையுடனே கையாளுகிறார் கட்டபொம்மன்.
“கவுல்” கொடுக்க சொல்லி
கறார் காட்டிய கட்டபொம்மன்
பாளையக்காரர்களுக்கு ஒரு மரியாதையை ஆங்கிலேயர்கள் கொடுத்திருந்தனர். அதன் பெயர் ‘கவுல்’. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் சந்திக்க விரும்பினால், சம்மந்தப்பட்ட பாளையக்காரருக்கு ‘கவுல்’ அனுப்பப்படும்.
அதில், எந்த சமயம் சந்திக்கலாம், சந்திப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும், படைவீரர்களுடன் வரலாமா, ஆயுதங்களுடன் வரலாமா, உணவு ஏற்பாடு, பாளையக்காரர்களுக்கான ஏற்பாடு, அதற்கு தலைமை ஏற்கும் தாசில்தார் யார் என்பது உட்பட அனைத்து விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது பாளையக்காரர்களுக்கு ஆங்கிலேயர்கள் அளிக்கும் மரியாதையின் அடையாளம். வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் பார்க்க வேண்டும் என அழைக்கும் போதெல்லாம் கட்டபொம்மன் ‘கவுல்’ எனப்படும் தகவல் அறிக்கையை கட்டாயம் கேட்பார்.
நீங்கள் என்ன மிரட்டினாலும் நான் வரமாட்டேன். எனக்கு முறையாக ‘கவுல்’ கொடுத்தால் தான் வருவேன் என்று கூறிவிடுவார் கட்டபொம்மன். முறையாக ‘கவுல்’ கொடுக்க சொல் வருகிறேன் என்பாராம்.
வீரபாண்டிய கட்டபொம்மனை பின்பற்றி மற்ற பாளையக்காரர்களும் வரி கொடுக்காமல் இருப்பது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
எப்படியாவது வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்துவிட வேண்டும் என்பதே ஆங்கிலேயர்களின் நோக்கமாக இருந்தது.
இங்குவா, அங்கு வா… என்று கட்டபொம்மனை அலைகழித்து, ஒரு வழியாக ராமநாதபுரத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் வரவழைத்துவிட்டனர்.
![]()





