விழுப்புரம், ஜன. 4:
கல்பட்டு கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு, விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது கல்பட்டு கிராமம். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், பிடாகம் தமிழழகன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சோழர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது:-
கல்பட்டு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் வெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட கருங்கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்தபோது 2 துண்டு கற்களில் எழுத்துகள் இருப்பது கண்டறியப்பட்டன.
ஒரு கல்லில் ‘இது பந்மா ஹேஸ்வரருக்கு ரக்ஷை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக கல்வெட்டுகளின் இறுதியில் குறிப்பிடப்படும் வாசகம் இதுவாகும். சிவாலயத்திற்கு உரியது. முற்கால சோழருக்கே உரிய வகையில் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளன.
இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டு ஆகும். மற்றொரு துண்டு கல்வெட்டில் ‘ராஜகேசரி வம்மக்கு (வர்மருக்கு) ஒடு நீக்கி விடுத்தார் இறை வீழ்த்’ எனும் முற்று பெறாத வாசகம் இடம்பெற்றுள்ளது. இதை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜயவேணுகோபால், இது பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கல்வெட்டு (கி.பி.11-12-ம் நூற்றாண்டு) என தெரிவித்தார். வரி நீக்கம் செய்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. இதில் குறிப்பிடப்படும் ராஜகேசரி வர்மர் யார் என்பது தெளிவாகவில்லை.
கல்பட்டு மாரியம்மன் கோவில் திடலில் பலகைக்கல்லில் ஆன விநாயகர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. பாதியளவு மண்ணில் புதைந்திருந்த இந்த சிற்பம் கிராம முக்கியஸ்தர்கள் முயற்சியால் வெளியே எடுக்கப்பட்டது. 4 கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் காட்சியளிக்கிறார். அவரது பின் வலதுகரம் நெற்கதிரையும் இடதுகரம் அரிவாளையும் ஏந்தியுள்ளன.
முன்வலக்கரத்தில் வைத்திருப்பது தெளிவாக தெரியவில்லை. இடதுகரத்தை தொடையின் மீது வைத்திருக்கிறார். கலைநயத்துடன் காணப்படும் விநாயகர் சிற்பத்தின் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாகும். கதிர் அரிவாளுடன் காணப்படுவதால் இந்த விநாயகர், வேளாண்மையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார்.
இதே மாதிரியான யானை முகன் சிற்பங்கள் இலங்கையில் பவுத்தர்களால் வணங்கப்படுவதாக ஆய்வாளர் விஜயவேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.
கல்பட்டு சனீஸ்வரன் கோவில் வளாகத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய விநாயகர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இதன் காலம் கி.பி.13-14-ம் நூற்றாண்டாகும். கல்பட்டு கிராமத்தில் சோழர் காலத்தில் சிவாலயம் இருந்துள்ளது.
ஆனால் காலப்போக்கில் மறைந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் மூலம் கல்பட்டு கிராமத்தின் 1,000 ஆண்டுகள் பழமை தெரியவந்துள்ளது. இந்த வரலாற்று தடயங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





