கதைகள் சிறுகதை

கலைக்காத குருவிக்கூடு – ஆர். வசந்தா

Makkal Kural Official

பிருந்தாவும் விஜயனும் ஒரே ஆபீசில் வேலை பார்த்தனர். ஒன்றாக மதிய உணவு சாப்பிடும்போது பழக்கம் ஏற்பட்டது. அது பிறகு நட்பாக மாறியது. கொஞ்ச நாட்களில் வெளியே போய் காபி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசும் வரை நட்பு இறுகியது.

விஜய் ஒரு நாள் ‘உன்னை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது’ என்று எனக்கு தோன்றுகிறது என்றான்.

பிருந்தா ஒரு புன்முறுவலில் பதிலளித்தாள்.

சம்மதம் என்று அதற்கு பதில் என்று எடுத்துக் கொண்டான் விஜயன்.

விஜய் நான் ஒரு டைவர்சி தான். ஆனால் மண முறிவு என்றாலும் சட்டப்பூர்வமாக மனமுறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினான்.

அவனின் கண்ணியமான நடத்தையும் முகக் கவர்ச்சியும் அவனை நேசிக்கத் தூண்டியது பிருந்தாவுக்கு.

தன் வீட்டிற்கு பிருந்தா விஜயனுடன் காரில் வந்து இறங்கினாள்.

ஒரு நாள் ‘தன் அத்தை பழமை வாதி. இந்த திருமணத்திற்கு சம்மதிப்பது சிரமமே’ என்று பிருந்தா விஜயனிடம் சொன்னாள்.

சந்தர்ப்பம் வரும்போது நான் என் அத்தையிடம் சொல்கிறேன் என்றும் பிருந்தான் சொன்னாள்.

பிருந்தா அந்த வீட்டில் 3 வது பெண். முதல் 2 அக்காவுக்கும் அப்பா, அம்மாவே பார்த்து திருமணம் செய்தனர். பிறகு அப்பா, அம்மா இருவருமே ஒருவர் பின் ஒருவராக அகால மரணம் அடைந்து விட்டனர்.

பிருந்தாவை அத்தை செண்பகம் இளம் விதவையாக அண்ணன் வீட்டிற்கு வந்தவள். இவர்கள் குடியிருக்கும் வீடும் அத்தை உடையது தான். சற்று கண்டிப்புடையவள். அவளின் மேற்பார்வையிலேயே பிருந்தாவும் வாழ்ந்து வந்தாள்.

தன் காதலை தெரிவிக்க மிகவும் பயந்தவள் துணிந்து ஒரு நாள் விஜயனுடன் தனக்கு ஏற்பட்ட காதலையும் சொல்லி விட்டாள்.

என்ன அதிசயம்.

அத்தை சொன்னாள் இதில் என்ன தயக்கம் திருமணம் எல்லாம் காலா காலத்தில் நடக்க வேண்டியது தானே. நான் காதலுக்கு எதிரியல்ல. நான் பட்ட கஷ்டம் என்னோடு போகட்டும். நீயெல்லாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் நினைப்பேன். வீட்டிற்கு நாளை கூட்டி வா நானும் உன் காதலனை பார்க்க வேண்டும் என்று கூறினாள்.

இவ்வளவு சுமுகமாக அத்தை சம்மதித்தது பிருந்தாவுக்கு மகிழ்ச்சியை தந்தது.

மறுநாள் விஜயனைப் பார்த்ததும் அத்தை மிகவும் மகிழ்ந்தாள். முந்திரி பக்கோடாவும் கேசரியும் செய்து கொடுத்து அசத்தினாள்.

பிருந்தாவுக்கு அத்தையின் சம்மதம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகத் தெரிந்தது.

மறுநாள் அத்தை, பிருந்தாவிடம் நம் வீட்டில் ஒரு குருவி கூடு கட்டியுள்ளது. அதனால் தான் இந்த நல்ல காரியம் நடந்துள்ளது என்றாள். குருவி கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று கூறினாள்.சில நாட்கள் கழித்து கூடு மின் விசிறியின் அருகிலேயே இருக்கிறது அது அடிப்பட்டால் துயரம் வரும். என்ன செய்வது என்று மாறிமாறி அதை பெரிய விஷயமாக புலம்பிக் கொண்டிருந்தாள்அத்தை.

ஒரு குருவியின் கூடு கலைவதை இவ்வளவு துன்பமாக அத்தை கருதுகிறாளே என்று பிருந்தாவும் அதற்கு பரிகாரம் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

ஒரு கை தேர்ந்த ஆளை வரவழைத்து அலாக்காக கூடை எடுத்து அறையின் ஒரு மூலையில் மாற்றி வைக்க ஏற்பாடு செய்து விட்டாள். குருவிகளும் தன் குஞ்சுகளுடன் மகிழ்ச்சியாகவே இருந்தன. அத்தையும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஒரு நாள் தன் சிநேகிதியுடன் சூப்பர் மார்க்கெட் சென்றாள்பிருந்தா.

அப்போது பணம் கட்டும் கவுண்டரின் வரிசையில் ஒரு பெண் நின்றிருந்தாள். பிருந்தாவின் சிநேகிதி ரமணி ,‘‘ இவள் விஜயனின் மாஜி மனைவி ராகிணி’’ என்று சொன்னாள்.

ராகிணி உடையும் தோற்றமும் மகிவும் பரிதாபமாகவே இருந்தன. மார்க்கெட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறப்போன பிருந்தாவிடம் ராகிணி வேகமாக வந்தாள். மன்னிக்கவும் நான் விஜயனின் முன்னாள் மனைவி. குழந்தைகள் படித்து முடிக்கும்வரை ஜீவனாம்சம் கொடுப்பதை நீடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டாள்.

சரிங்க என்றாள் பிருந்தா.

அன்று மாலையே பிருந்தா வீட்டிற்கு வந்தான் விஜயன். கொஞ்ச நேரம் பேசியதும், ‘ஆமாம் என்ன காரணத்திற்கு நீங்கள் விவாகரத்து வாங்கினீர்கள்’ ? என்று கேட்டாள் பிருந்தா.

‘‘வேறு காரணமில்லை.அவளுடைய அத்தை மகன் அடிக்கடி வருவான். எனக்கு சந்தேகமாகவே தெரிந்தது. என்ன சொன்னாலும் ஏதேதோ காரணம் சொல்லி அவனை வர விடாமல் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அதன் காரணமாகவே விவாகரத்தை வாங்கினாள். நீ சொல்லு பிருந்தா இது நியாம் தானே என்றான். பிருந்தா சமாதானம் ஆனாள்.

சில நாட்கள் கழித்து ஒரு சிறுவன் பிருந்தா வீட்டுக்கு வந்தான். கதவை திறந்து பார்த்ததும் மிகவும் பரிச்சியமான முகமாக இருந்தது. உள்ளே வந்து உட்காரச் சொன்னாள்.

என்னப்பா விஷயம்? என்றாள்.

எனக்கு ஒரே சகோதரி தான். அவள் மாடியிலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டது. அவள் தன் அப்பாவை பார்க்க ஆசைப்படுவதாகச் சொன்னாள். அதற்காகவே என் அப்பா விஜயனை அழைத்துப் போக வந்தேன் என்று கண்ணீருடன் கூறினான்.

நாளை கண்டிப்பாக வருவார் என்பதாகச் சொல்லி விட்டாள்.

பிருந்தா அந்த மருத்துவமனைக்குச் சென்றாள். அந்த அத்தை மகன் தான் ஓடி ஓடி வேலை செய்தான். மருந்து வாங்கி வருவதும் பணம் கட்டுவதுமாக இருந்தான். அவன் பெயர் ராகவன். அவன் சிறுவயதிலிருந்து தன் மாமா வீட்டிலிருந்து படித்து வேலையிலும் சேர்ந்து விட்டான். அத்தை மகள்களையும் உடன் பிறந்த சகோதரிகளாகவே பழகினான். அந்த மாமா வீட்டிற்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருப்பதாகச் சொன்னான்.

மறுநாள் வீட்டிற்கு வந்த விஜயன் நம் கல்யாணப் பத்திரிகை எல்லாம் இந்த விலாசங்களுக்கு அனுப்புமாறு சொன்னான். பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.

விஜயன் போனதும் அத்தையை கூப்பிட்டுச் சொன்னாள்.

அத்தை இந்த கல்யாணம் நின்று போய் விட்டது என்றாள் பிருந்தா. மிகவும் அதிர்ச்சியுள்ள அத்தை காரணம் என்ன என்றாள்.

ஒரு குருவி கூட்டை கலைத்து விடக்கூடாது என்று எவ்வளவு கவலை கொண்டீர்கள். அதேபோல் தான் நானும் ஒரு குடும்பம் என்ற குருவி கூட்டைக் கலைக்கக் கூடாது என்று தான் இந்த முடிவெடுத்தேன் என்றாள்.

பிருந்தா சொன்னாள். விஜயனுக்கு 2 குழந்தைகள் உள்ளது. அவனும் அங்கு போய் பார்த்துவருகிறான். குழந்தைகளிடமும் பாசமாகவே நடத்திருக்கிறான். ராகவன் என்ற அத்தை மகனாலேயே இந்த மண முறிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த வீட்டு குடும்பம் கலைய நான் காரணமாகக் கூடாது என்றாள் பிருந்தா.

அத்தை சொன்னாள், உன் நிலையை நினைத்தாயா ? இனி உன்னை யார் கல்யாணம் செய்வார்கள் என்று யோசித்தாயா ? என்றாள்.

என்னைக் கல்யாணம் செய்ய யாராவது வருவாகள். ஆனால் என்னால் ஒரு குடும்பம் கலைவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னாள் பிருந்தா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *