சென்னை, ஜன. 19:
கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கறிக்கோழி பண்ணைகள் பெரிய நிறுவனங்களிடமிருந்து கோழிக் குஞ்சுகளைப் பெற்று, 42 நாட்கள் வரை வளர்த்து கறிக்கோழிகளாக அளிக்கின்றன. கோழி எடையின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் 50 காசு கறிக்கோழி பண்ணைகளுக்கு அளிக்கப்படும்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கூலியை உயர்த்த வலியுறுத்தி கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக, ஒரு கிலோ சிக்கன் விலை முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளை பொய்ப் புகார்களின் பேரில் தமிழக அரசு கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் இந்த விவசாய விரோதப் போக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்குச் சமம்.
முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி கறிக்கோழி வளர்ப்புக் கூலியினை ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் என உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
![]()





