செய்திகள் முழு தகவல்

கர்நாடக ‘இசைப் புயல்’ – பிறவி மேதை: பிரமிப்பில் ஆழ்த்தும் 12 வயது ஓம் ஈஸ்வர்!

Makkal Kural Official

‘ஓம் ஈஸ்வர் ’ – இவரை கர்நாடக ‘இசைப் புயல்’ என்று அங்கீகரிக்கலாமே(ா)? – சந்தேகத்தோடு சந்தோஷக் கேள்வி எழுப்ப வைத்திருக்கும் கலைவாரிசு, டிரினிட்டி மிரர் இசைக் கலை விழாவில். (இடம்: மயிலாப்பூர் ஆர்ஆர் சபா) ஒட்டு மொத்த அரங்கையே பரபரப்பாக பேச வைத்த இளம் கலைஞன். பிறவி மேதை என்று பிரமிப்பில் ஆழ்த்த வந்திருக்கும் இளம் மொட்டு, விரிந்து மணம் வீச ஆரம்பித்திருக்கிறது.

புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் வித்வான் ஈஷ்வர் ராமகிருஷ்ணனின் மகன் ஓம் ஈஸ்வர். மூக்கில் விரல் வைக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியை மேடையில் ஏறி நடத்தி ஒரு அசாதாரண தருணத்தை கண்ணில் காட்டினார். காதில் ஒலிக்க விட்டார்.

12 வயதில், ஓம் ஈஷ்வர் : முதிர்ச்சியுடன் நுட்பம் மற்றும் ஆழம் கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கினார். பார்வையாளர்களில் பலர் அவனது நெரவல் மற்றும் கல்பனா ஸ்வரங்களைக் கேட்டு, கைதட்டி, ‘பலே–பலே’ (அந்தக்கால ரசிகர்கள் 70–80 அகவையைத் தொட்டவர்கள்) என்று ஆனந்தமாயச் சொன்னார்கள்.

சொந்தக் கற்பனை படைப்புகள் அனைத்தும் – தொழில்நுட்ப தேர்ச்சியை மட்டுமல்ல, மனோதர்மம் பற்றிய ஆழமான புரிதலையும் வெளிப்படுத்தின, இது அவரது வயதில் அரிதாகவே காணப்படும் ஒரு பண்பு.

அவன், பிரபலமான மைசூர் வாசுதேவாச்சார் இசையமைப்பான “ப்ரோச்ரேவருரா” என்ற பாடலுடன் ‘காமாஸில்’ வசீகரத்துடனும் துல்லியத்துடனும் பாடியபோது ஆகா…வென ரசித்தது கூட்டம்.

தொடர்ந்து, சியாமா சாஸ்திரியின் “நின்னுவினா மரிகலடா” பாடலை ஆழமாய் நெகிழ்ச்சியாகப் பாடியது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பாவம் – உணர்ச்சி ரீதியாக கிளர்ச்சியடையச் செய்தது. ஒரு இளம் கலைஞன் எப்படி இவ்வளவு தெளிவான உணர்ச்சியை உள்வாங்கி வெளிப்படுத்த முடியும் என்று பலர் யோசித்தனர். என்ன… என்னமாயப் பாடுகிறான்… என்னமாய் ஒரு ஞானம்… பூர்வஜென்ம புண்ணியம்… என்று சீனியர் சிட்டிசன்கள் சிலாகித்தனர்.

ஸ்ரீ தியாகராஜரின் “ராம நா வேகானி நன்னு” பாடல் தொடர்ந்தது, இதை ஓம், முழுமையாக அனுபவித்து சுகானுபவத்தோடு பாடினார். அதைத் தொடர்ந்து கல்யாணியில் முத்துசாமி தீட்சிதரின் “பஜரே ரே சித்த” பாடலைப் பாடினார். (மிஸ்ர சாபுவில்) இந்த கனமான இசையமைப்பை அவர் கையாண்டதில் பாரம்பரிய அழகியலின் வலுவான பிடிப்பை பிரதிபலித்தது.

மகாகவி பாரதி பாடல்…

இசை நிகழ்ச்சியின் பிற்பகுதியின் சிறப்பம்சமாக பாரதியாரின் “நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலை (செஞ்சுருட்டி) அரங்கேற்றினார். பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த பாடல். இதயப்பூர்வமான உணர்ச்சியுடன் பாடினார். திருகோகர்ணம் வைத்தியநாத பாகவதரின் பூர்வியில் தில்லானாவுடன் ஓம் தனது இசை நிகழ்ச்சியை முடித்தார்.

வயலின் – ஈஷ்வர் ராமகிருஷ்ணன் (தந்தை. யாருக்கு அமையும் இப்படி ஒரு பாக்கியம்…?) மிருதங்கம் – சர்வேஷ் கார்த்திக். இவ்வருவரின் அனுசரணையான பக்கவாத்தியம், ஓம் ஈஷ்வரை இன்னும் ஓர் படி உயரேத் தூக்கிப் பிடித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *