புதுடெல்லி, டிச. 30–
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளனர்.
டெல்லியில் நேற்று ஆஜரான தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் 8 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நீடித்தது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கரூரில் முகாமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
ஏற்கெனவே கரூரில் வைத்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்கள் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.இதையடுத்து தவெக நிர்வாகிகள் ஆனந்த் உள்ளிட்டோர் நேற்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். இவர்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகினார்கள். நேற்றைய விசாரணையில் பிரச்சார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவர் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து வருகின்றது. இன்றும் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
![]()





