செய்திகள்

கரூர் சம்பவம்: முதலமைச்சர் – எடப்பாடி காரசார விவாதம்

Makkal Kural Official



சென்னை, அக். 15–

தமிழக சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டபேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க.வினர் பின்னர் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்து பேசுகையில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவருக்கு அவ்வப்போது முதலமைச்சரும், பல்வேறு அமைச்சர்களும் குறுக்கிட்டு பதிலளித்தார்கள். காரசார விவாதங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாக 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருந்தார். அப்போது கூடிய கூட்டத்தை வைத்து கரூரில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு எண்ணிக்கை அளித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பேசினார்.

அரசியல் ஆதாயம்

தேடுவது யார்?

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், கூட்டணிக்கு கட்சியை சேர்க்கும் உள்நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்துக்காக பேச வேண்டாம் என்று பதிலளித்தார்.

இதையடுத்து, முதல்வரின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது யார்? கரூர் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸில் திமுக மருத்துவரணி வந்தது எப்படி? தண்ணீர் பாட்டில்களில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு பேசுகையில், இரவோடு இரவாக தூங்காமல் தனி விமானம் மூலம் கரூர் சென்ற முதல்வரை பாராட்ட வேண்டாமா? என்றார்.

அது முதல்வரின் கடமை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்

உடனே மு.க.ஸ்டாலின் எழுந்து, ஆம், எனது கடமைதான். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது முதல்வர் என்ன சொன்னார் என்பதை சொல்லவா? என்று கேட்க, உடனே எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 60 -க்கும் மேற்பட்டோர் தமிழக மக்கள்தான். அங்கு செல்லாதது ஏன்? என்று கேட்டார்.

உடனே மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, கள்ளக்குறிச்சி சம்பவம் வேறு. அங்கு விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தார்கள். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் பலியானார்கள் என்றார்.

கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார்.

சபைக்குள் தர்ணா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பியதால் தான் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் என்று கூறினார்.

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசிய நிலையில், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அண்ணா திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், பேரவையில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் அண்ணா தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.

இதனிடையே, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? இல்லையா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்து கேள்விகளை எழுப்புமாறு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

இதனிடையே, அமளியில் ஈடுபட்ட அண்ணா திமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களை பேரவைத் தலைவர் அழைத்த நிலையில், அண்ணா தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *