சென்னை, ஜன. 11:
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவகத்தில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. இதைத் தொடரந்து டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடமும் விசாரணை நடந்தது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
இரண்டு நாட்கள் காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் 3 பேரிடமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
கூட்டத்திற்கு விஜய் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தார்? தாமதத்திற்கு என்ன காரணம்?காவல்துறையிடம் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று அனுமதி கோரப்பட்டது? ஆனால் உண்மையில் திரண்ட கூட்டம் எவ்வளவு? என பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.
டெல்லி காவல்துறைக்கு
கடிதம்
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை அதிகாரிகள் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6–ந் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 7 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார்.
மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.
கரூர் கூட்டத்துக்கு தாமதாமாக வந்தது? கூட்டத்தை ஒருங்கிணைத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜய்யிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் பல மணி நேரம் விசாரணை இருக்கலாம் எனவும் நாளை மட்டுமின்றி நாளை மறுநாளும் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
![]()





