செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 29:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ல் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூரில் முகாமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்தினா், காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் த.வெ.க. மாநில பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜர் ஆகுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த விசாரணை இன்று முழுவதும் நடக்கும் என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் ஆகியோரும் இன்று விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *