செய்திகள்

‘கரூருக்கு விசாரணைக்குழுவை அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு’: ஸ்டாலின் விமர்சனம்

Makkal Kural Official

ராமநாதபுரம், அக்.3–

தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா தி.மு.க.-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தாக்கினார்.

பா.ஜ.க.-வை அண்ணா திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதாவது இருக்கிறதா? எந்த கோரிக்கையாவது முன் வைத்து கூட்டணி சேர்ந்திருக்கிறார்களா? எதுவும் கிடையாது என்றும் சாடினார்.

கரூருக்கு விசாரணைக்குழுவை ஒன்றிய அரசு அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது என்றும் தாக்கினார்.

ராமநாதபுரத்தில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இவ்வாறு தாக்கிப்பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:–

கடந்த, 2023–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது சொன்னேன். மீனவர்கள் நலனுக்காக மொத்தம் 10 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தேன். அந்த பத்து அறிவிப்புகளுமே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், அறிவிப்பில் குறிப்பிட்டதை விடவும், அதிகமாகவே செயல்படுத்தி வருகிறோம் என்று பெருமையுடன் நான் இங்கு பதிவு செய்கிறேன். எடுத்துக்காட்டாக, 45 ஆயிரம் பேருக்கு மீன் பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். ஆனால், இன்று வரை மொத்தம் 81 ஆயிரத்து 588 மீனவர்களுக்கு, 687 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் நன்மை செய்யும் ஆட்சி இது!

மீனவர்களைக் காக்க

ஒன்றுமே செய்யாத ஒன்றிய அரசு

மீனவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் ஏற்படுகின்ற தாக்குதல். இதை நாம் தொடர்ந்து அதில் ஈடுபட்டு கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துறோம்! ஆனால், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நம்முடைய மீனவர்களைக் காக்க எதுவும் செய்யவில்லை.

கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு ஒன்றிய பாஜக அரசாங்கம் ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதை செய்ய கூட பா.ஜ.க. அரசு மறுக்கின்றது. இலங்கை சென்ற இந்தியப் பிரதமரும் இதை வலியுறுத்த மறுக்கிறார். கச்சத்தீவை தர மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சொல்லுகிறார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஏதாவது மறுப்பு பேசியிருக்க வேண்டுமா? வேண்டாமா?

தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது? நாம் இந்தியர்கள் இல்லையா? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது? தமிழ்நாடு மீது அவர்களுக்கு இருக்கின்ற வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜி.எஸ்.டி.யால் நிதி உரிமை போய்விட்டது, நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை, சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்க மாட்டார்கள்.

பள்ளிக் கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமர் பெயரில் இருக்கின்ற ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.

இதெல்லாம் போதாது என்று, நீட், தேசியக் கல்விக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கும் தடை!

கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிற்கும் மேல் தொகுதி மறுவரையறை!

இப்படி, தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே ஒன்றிய பா.ஜ.க. அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது.

கரூருக்கு விசாரணைக்குழுவை

அனுப்புவது அக்கறையாலா?

தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது.

இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டும் – அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது! “இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா? உருட்டலாமா?” என்று பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர்வாழத் துடிக்கின்ற ஒட்டுண்ணியாக தான் பா.ஜ.க. இருக்கிறது.

தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தங்களுடைய தவறுகளிலிருந்து தப்பிப்பதற்காக வாஷிங் மிஷின் தான் பாஜக. அந்த வாஷிங் மிஷினில் உத்தமராகிவிடலாம் என்று குதித்திருக்கக்கூடிய எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை எப்படி பயன்படுத்திருக்கிறார்கள் என்றால், கூட்டத்திற்கு கூட்டம் – மேடைக்கு மேடை – தெருவுக்கு தெரு சென்று நம்முடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை வழங்கி இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பாதையில்

அவரோ, மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழ்நாட்டு மக்களின் மேலேயும் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பாஜக-வுடன் கூட்டணிக்கு போகமாட்டார்கள். ஏனென்றால், நாட்டு மக்களை துண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்திருக்கக்கூடிய அரசியல் முகம், அதிகார பலம் தான் பாஜக. அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பாஜக.

பெருந்தலைவர் காமராசரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ் அமைப்போடு நூற்றாண்டில் அவர்களுடைய செயல் திட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறார்கள். வரலாறு முழுவதும் இவர்களுடைய கொள்கை சதித் திட்டங்களுக்கு எதிராக நின்று தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களை காக்கின்ற நம்முடைய பணி – அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் போராடி, மக்களின் தேவைகளை உணர்ந்து, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர், அன்புக்கரங்கள் என்று உங்களுக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணிகளை நாங்கள்தான் தொடர்ந்து, தொய்வில்லாமல் செய்வோம்! என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கின்ற கடமையை இன்னும் இன்னும் சிறப்பாக செய்து காட்டுவேன்! உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவேன்!

திராவிட மாடல் ஆட்சிதான் அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் வென்று, தொடரும்! அப்போது, இன்னும் பல்வேறு திட்டங்களோடு உங்களை எல்லாம் சந்திப்பதற்கு வருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *