புதுடெல்லி, அக். 7–
கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் கரூரில் விசாரணையைத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் பலியானவர்களில் பட்டியலினத்தவர் அதிகம் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தவெக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கரூர் நெரிசல் சம்பவத்தில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது. இந்த வழக்கை காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
![]()





