மதுரை, அக். 3–
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழு சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும், தவெக பதிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்குகள் ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை அரசியல்
களமாக்காதீர்கள்
இதனை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் பாதிக்கப்பட்டவரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதால், எம்எல் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணைக் கோரியவருக்கு சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்றும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள். யாராவது இப்படி நடக்கும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிபிஐ விசாரணை
அவசியம் இல்லை
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
காவல்துறையினரின் போதுமான ஏற்பாடு இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பு இதனை மறுத்திருக்கிறது. காவல்துறையினர் தவறு என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு வாதங்களை முன்வைத்திருக்கிறது. இதனையடுத்து காவல்துறைக்கு நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. “விஜய் பிரச்சாரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? கரூர் பிரச்சாரத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை போன்றை போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு” என்று கூறியிருக்கிறது.
த.வெ.க., தமிழக அரசு
பதலளிக்க உத்தரவு
இதற்கு அரசு தரப்பு கூறும்போது; அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அனுமதி அளிக்கப்பட்டது. சாலையின் வடக்கேதான் அனுமதி வழங்கப்பட்டது என்றனர். இதையடுத்து பேசிய நீதிபதிகள், ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ள கட்சிகளுக்கு கூட்டம் நடத்த தடையில்லை என கூறியது. இதையடுத்து, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என கூறியது. இந்த வழக்கில் தமிழக அரசும், தவெகவும் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
![]()





