பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கரூர், செப்.29–-
வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 39 பேர் உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன் (வயது 34) என்பவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இன்று சுகுணா (வயது 65) பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 13 ஆண்கள், 17 பெண்கள், 10 குழந்தைகள் என 40 பேர் உயிரிழந்தனர். அதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், ஈரோடு மாவட்டம் –- 2 பேர், திருப்பூர் –- 2 பேர், திண்டுக்கல் – 2 பேர், சேலம் – 2 பேர் அடக்கம்.
வேலைக்கு சென்றவர்
திரும்பவில்லை
கூட்டத்துக்கு வந்தவர்களில் பலர் தங்களது உறவினர்களை காணாமல், அவர்களது புகைப்படங்களுடன் கரூர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பறிதவிப்புடன், அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர். அதே நேரம் மகளை, மகனை, மனைவியை, கணவரை இழந்தவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியது. இந்த நிலையில் வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். த.வெ.க. கூட்டம் முடிந்த நேற்று முன் தினம் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் சுகுணாவை தேடியுள்ளனர். அப்போது கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேர் உட்பட மொத்தம் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் நலமாக உள்ளனர். இதேபோல கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்பி
இந்த சம்பவத்தில் பலியானவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக்கதை உள்ளது. அவர்களில் சிலரை பற்றிய உருக்கமான தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-–
பலியானவர்களில் கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஆகியோர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. விஜய் ரசிகர்களான அவர்கள் இருவரும், தங்கள் தலைவரை காண வேண்டும் என்ற ஆவலில் தங்களது பெற்றோரிடம் அனுமதி பெற்று அந்த கூட்டத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் ‘செல்பி’ எடுத்தனர். அதனை அவர்கள் தங்களது உறவினர்களுக்கும் அனுப்பினர். இதுதான் கடைசி நாள் என்பதை அறியாமல் அவர்கள் எடுத்த ‘செல்பி’ தற்போது வைராலாகி உள்ளது.
இதேபோல் இந்த சம்பவத்தில் கரூர் மாவட்டம் ஏமூர்புதூர் கிராமத்தை சேர்ந்த 5 பேரும் பலியாகியுள்ளனர். இந்த ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த கூட்டத்துக்கு சென்றனர். அவர்களில் செல்வராஜ் மனைவி சந்திரா (வயது 40), காளியப்பன் மனைவி அருக்காணி (வயது 60), சக்திவேலின் மனைவி பிரியதர்ஷிணி (வயது 35), இவருடைய மகள் தரணிகா (வயது 14), பன்னீர்செல்வம் மகன் பிரித்திக் (வயது 10) ஆகியோர் பலியானார்கள். இவர்களில் சிறுமி தரணிகா கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை என்பதால் தாய் பிரியதர்ஷினியுடன் விஜய்யை பார்க்க சென்றார். சிறுவன் பிரித்திக் அந்த ஊரில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவரான பிரபாகரன் மனைவி பாத்திமாபானு (வயது 29). இவருக்கு 3 வயதில் மகன் உள்ளான். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகனை விட்டுவிட்டு, கணவனும், மனைவியும் மட்டும் பிரச்சார கூட்டத்துக்கு சென்றனர். அங்கு நெரிசலில் சிக்கி பாத்திமாபானு மயக்கம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் பாத்திமாபானுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாத்திமாபானு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
![]()





