சென்னை, ஜன. 14–
கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உட்பட உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக ஆண்டுதோறும் கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை கடந்த வியாழக்கிழமை கோயம்பேடு சந்தை அருகே திறக்கப்பட்டது.

லாரி லாரியாக வந்தது
கோயம்பேடு அங்காடி நிர்வாகம் மூலம் சுமார் 7 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில் விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை, சேத்தியாதோப்பு, ஈரோடு, சேலம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து லாரி லாரியாக கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள், வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று லாரி லாரியாக கரும்புகள் வந்து குவிந்தன.
மேலும், தோரணம் உள்ளிட்ட பொருள்கள் குடியாத்தம் பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் எளிதாக பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தையை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரும்பு ரூ.40
இந்நிலையில், 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதுதவிர மஞ்சள் ஒரு கட்டு (10) – ரூ.50 முதல் ரூ100 வரையிலும், இஞ்சி ஒரு கட்டு (5) ரூ.50 முதல் ரூ.100 வரையிலும், தோரணம் ஒரு மட்டை – ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தை வரும் ஜனவரி 17ஆம் தேதி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
![]()





