செய்திகள்

கருப்பைவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Makkal Kural Official

சென்னை, டிச.13–

இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரால் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள எச்.பி.வி. (HPV) – கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார்.

மேலும் அவர் விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகட்டை வெளியிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சேவை பணியில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகளுக்கு, சிகிச்சை மையங்களுக்கு, மருத்துவர்களுக்கு, தன்னார்வலர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

கத்தியில் நெற்றியில்

கோடு: பரவும் எய்ட்ஸ்

பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சித்தாமாரி என்று சொல்லக்கூடிய மாவட்டத்தில் நேபாளத்தை ஒட்டி இருக்கின்ற மாவட்டம். ஆன்மீக நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை நெற்றியில் கத்தியினைக் கொண்டு ரத்தம் வழிய ஒரு கீரலை போடுவதாக சொல்கிறார்கள். அது அவர்களுடைய நம்பிக்கை சார்ந்தது.

அதில் நாம் பெரிய அளவில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றாலும் ஒரே கத்தியில் பல பேருக்கு நெற்றியில் கோடு போடுவது மூலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் 7500 பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் குழந்தைகள் 400 பேரும்கூட அடங்குவர். இதுபோன்ற செயல்கள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் ஏதாவது ஏற்படுவது தொடர்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னாள் இரத்த ஓவியம் வரைகின்ற 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கடைகள் மூலம் இல்லாமல் வீடுகளில் செய்கிறார்களா என்று கண்காணிக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஊசிகளை எப்படி கையாள்வது போன்ற பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வரும் காரணத்தினால்தான் இந்தியாவிற்கான பாதிப்பு சதவிகிதத்தில் இருந்து தமிழ்நாடு குறைந்த அளவிலான பாதிப்புகள் இருந்துக் கொண்டிருக்கிறது என்றாலும், இதில் பூஜ்ஜியம் என்கின்ற வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் எட்டுவது என்கின்ற நடவடிக்கை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

ஒப்பந்தப்பணி முடிகிறது

இது தொடர்பாக ஒப்பந்தப்பணி முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இந்த டெண்டர் முடிவடைந்தவுடன் HPV தடுப்பூசி பெறப்பட்டு எப்படி உபயோகப்படுத்துவது தொடர்பாக பயிற்சி இந்த வாரம் முதல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் இது செயல்படுத்தப்பட உள்ளது என்றாலும், தொடக்கமாக அதிகமான கருப்பைவாய் புற்றுநோய் அதிகமாக உள்ள மாவட்டங்கள் என்று கண்டறியப்பட்டிருப்பது அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகும். முதல் தவணையாக 4 மாவட்டங்களில் 27,000 குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள்.

இந்த 4 மாவட்டங்களில் அடுத்த மாதம் உடனடியாக இந்த பணி தொடங்கப்படவிருக்கிறது.

உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்புதான் கருப்பைவாய் புற்றுநோய்களுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நாம் இலவசமாக இந்த திட்டத்தை தொடங்குகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மேயர் ஆர்.பிரியா, மக்கள் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் திலகம் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *