சென்னை, ஆக. 7–
கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். இறுதியாக மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
வெற்றி பாதையில்
நடைபோடுவோம்
கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு.
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
![]()





