செய்திகள்

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

Makkal Kural Official

பாங்காக், டிச. 14–

கம்போடியாவுடன் 5 நாட்களாக தொடரும் எல்லை மோதலில் தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக்கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டது. இரு தரப்பிலும் 43 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், கடந்த அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், கடந்த 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் சண்டை துவங்கியது. ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எல்லையோர கிராமங்களில் வசிக்கும் நுாற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், அப்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். ஆனால், இரு நாட்டு எல்லைகளிலும் போர் தீவிரமாக நடக்கிறது.

தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், கம்போடியா ராக்கெட்டுகளை ஏவியதாகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றன. 5 நாட்களாக தொடரும் மோதலில் தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *