சென்னை, ஆக.9-
‘கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர், `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார்.
ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர், கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழாவையொட்டி `இயற்றழிழ் அறிஞர்’ என்ற சிறப்பு விருதை பேராசிரியர் ஞானசுந்தரம், தமிழ் அறிஞர் பழ.பழனியப்பன், சென்னை கம்பன் கழகத்தின் செயலாளர் சாரதா நம்பி ஆரூரன், ஆன்மிக பேச்சாளர்கள் சுகி.சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கு வழங்கி வாழ்த்து கூறினார்.
`கம்பன் கலைநயச்செல்வர்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்றார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த விழாவுக்கான அழைப்பிதழை ஜெகத்ரட்சகன் என்னிடத்தில் வழங்கிய போது என்னுடைய பெயருக்கு முன்னால் `நடையில் நின்றிய நாயகன்’ என்று போட்டிருந்தது. நான் நடந்து, நடந்து மக்களை சந்திக்கிறதால், இந்த பட்டத்தை கொடுத்து இருக்கிறீர்களோ? என்று அவரிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே இது கம்பராமாயண வரிகள் என்று சொன்னார்.
என்ன இது, ஸ்டாலினுக்கும், கம்பன் விழாவுக்கும் என்ன தொடர்பு? என்று யாரும் கேட்க வேண்டாம். 1999-ம் ஆண்டு இதே அரங்கத்தில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் முன்னின்று நடத்திய கம்பன் விழாவில் கருணாநிதி பங்கேற்றார்.
அதற்கு முன்பு 1967-ம் ஆண்டு பெரியவர் சா.கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாவிலும் கருணாநிதி பங்கேற்று பேசினார். அப்போது அவர், `இந்த விழாவுக்கு வந்த என்னை ஆச்சரியத்தோடு பார்க்காதீர்கள். என்னை அழைத்து வந்தவர்களை ஆச்சரியத்தோடு பாருங்கள்’ என்று நகைச்சுவையோடு சொன்னார். நானும் அப்படித்தான். கம்பரின் தமிழுக்காகவும், ஜெகத்ரட்சகனின் அன்புக்காகவும் இங்கு வந்திருக்கிறேன்.
இதுபோன்ற விழாக்கள் இலக்கிய சுவைகளை பேசுவதோடு மட்டுமல்லாமல், இன்றைய இளைய தலைமுறைக்கும் இலக்கிய சுவையை ஊட்டுகிற வகையில் அமையும். திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம். சில கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டாலும், கவிதைக்காக, அதில் உள்ள தமிழுக்காக பாராட்டப்பட்டது.
1989-ம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய கருணாநிதி, கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதி ஏற்போம் என குறிப்பிட்டார். வன்மை இல்லை ஓர் வறுமையின்மையால் என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளது. இதுதான் கம்பன் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும், கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கம்பன் கழகத்தின் பொன் விழா நிறைவை முன்னிட்டு நீண்ட நாட்களாக பதிப்பில் இல்லாத கம்பன் தொடர்பான பயனுடைய 15 புத்தகங்களை தமிழக அரசின் பொது நூலகத்துக்கு கம்பன் கழகம் விலையில்லாமல் வழங்கியது. இந்த புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தி.மு.க. எம்.பி., ஆ.ராசா, வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![]()





