மக்கள் நீதி மய்யம் அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்னை, ஜூலை 15–
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், ஜூலை 25 ந்தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்ய சபா எம்.பி) பதவியேற்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் எப்போது பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ந்தேதி பதவியேற்பு
அந்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் இந்த நாடாளுமன்ற பிரவேசம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அவரது வருகை, நாடாளுமன்ற விவாதங்களில் புதிய பரிமாணங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()





