செய்திகள்

கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், சென்னை விமான நிலையம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, அக். 4–

சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், விமான நிலையம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, கவர்னர் மாளிகை, விமான நிலையம், பள்ளி, கல்லூரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமான நட்சத்திரங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லாமல் அது வெறும் புரளி என்பது தெரியவருகிறது. போலீசார், மிரட்டல் விடும் ஆசாமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடும் போது ஒரு சிலரை கைது செய்தாலும், அவர்களில் சிலர் மன நலம் பாதிக்கப்பட்டவராகவும், ஒரு சிலர் தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் மிரட்டல் விடும் ஆசாமிகளை போலீசார் கண்டுபிடிப்பதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

குண்டுகள் வெடித்து சிதறும்

இந்நிலையில் சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு மற்றும் விமான நிலையம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவு ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, சக்தி வாய்ந்த அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனருக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழு கூட்டம் நள்ளிரவில் நடந்தது.

கூட்டத்தில் விமான நிலைய உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ் அதிகாரிகள், சிஐஎஸ்எப் அதிகாரிகள், விமான நிறுவன உயர் அதிகாரிகள், விமான நிலைய காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் உடனடியாக, சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விடிய விடிய சோதனை நடைபெற்றது. அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி எம்.பி.,

ஆடிட்டம் குருமூர்த்தி வீடு

இதே போல் நேற்று இரவு இ-மெயில் மூலமாக சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய 6 இடங்களுக்கும் தொலைபேசி மூலமாக தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு மேற்கண்ட இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அது புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதற்கடையில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *