கட்டபொம்மன் – 6
பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்ற பானர்மேன், கயத்தாறில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதும்போது, கட்டபொம்மனை தூக்கிலிடும் அந்த கடைசி நிமிடம் ‘அன்று மலர்ந்த செந்தாமரை மலர் போல் கட்டபொம்மனின் முகம் இருந்ததாக’ வர்ணிக்கிறார். மரண பயமோ, வாட்டமோ எதுவுமே அவர் முகத்தில் தெரியவில்லை.
கைகளில் கால்களில் விலங்குகள் பூட்டியிருந்தாலும், காலை நன்றாக பூமியில் பதித்து நடந்து வந்தார். அப்படி வரும்போது இருபுறமும் பாளையக்காரர்களை கம்பீரமாக பார்த்தபடியே நடந்து வந்தார்.
அப்போது ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்த பாளையக்காரர்களை ஏளனமாக பார்த்து சிரித்துள்ளார். அடிமையாக வந்து நிற்கிறீர்களே என்று…
விசாரணை முடிந்து அவரிடம், என்ன சொல்ல விரும்புகிறாய்… என்று ஆங்கிலேயர்கள் கேட்டபோது, கோட்டையை விட்டு வெளியேறியிருக்க கூடாது, நான் செய்த தவறு அது. கோட்டையை பாதுகாக்க கடைசி வரை நான் போராடியிருக்க வேண்டும். இப்படி ஒரு இழிவு சாவு எனக்கு தேவை கிடையாது என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
ஊமைத்துரையை நினைத்து
உருகிய கட்டபொம்மன்
தம்பி ஊமைத்துரையை நினைத்து உள்ளார்.
தம்பி… அஞ்சாத சிங்கம் நீ… எங்கே இருக்கிறாய்…
உன்னை பார்க்க ஆவலாக இருக்கிறது என்று கடைசியாக சொல்லி இருக்கிறார்.
விசாரணை முடிந்து கட்டபொம்மனை தூக்கிலிட சென்ற ஆங்கிலேயர்களை பார்த்து,
விலகுங்கள்… நானே தூக்கிட்டுக்கொள்கிறேன்… என்று சொல்லிவிட்டு, தூக்கு கயிறை முத்துமிட்டு விட்டு… அவரே தூக்கிட்டுக்கொண்ட வீரத்திருமகனார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் தனது உரிமைக்காக தானே போராடினார். எதற்காக இவ்வளவு கொடுமையான தண்டனை. இவருக்கு ஏன் ஒரு இழிவான மரணத்தை தர வேண்டும் என ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் வெல்ஸ் சொல்லி இருக்கிறார்.
கயத்தாறில் அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பு ஒரு புளியமரத்தில் தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டுள்ளனர். அந்த மரம் விரைவில் பட்டு போயுள்ளது.
வீரன் ஒருவனை தூக்கிலிட காரணமாக இருந்ததாக எண்ணி மரமே வெட்கப்பட்டு தன்னைத் தானே தண்டித்துக்கொண்டதாக பொதுமக்கள் கருதிக் கொண்டனர்.
1799ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
![]()





