சென்னை, ஆக.19-
கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சிக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இது தங்களது வணிகச்சின்னம் என்றும், இந்த நிறங்களில் கொடியை பயன்படுத்த விஜய் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், ‘வணிக சின்னமாக பதியப்பட்ட எங்கள் சபை கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயலாகும். எங்கள் கொடியும், த.வெ.க. கொடியும் ஒன்று போல இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அதனால், சிவப்பு மஞ்சள் நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசியல் சித்தாந்த அடையாளமாகவும், தொண்டர்களை அணி திரட்டுவதற்காகவும் கொடியை அரசியல் கட்சிகள் அடையாளமாக பயன்படுத்துகின்றன. ஆனால் மனுதாரரின் இந்த கோரிக்கை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். கொடியை எங்கள் கட்சி வர்த்தக ரீதியாக பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தும் இந்த கொடியினால் மனுதாரருக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதையும் கூறவில்லை. எனவே இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறியிருந்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘இரு கொடிகளையும் ஒப்பிடும்போது, மனுதாரர் சபை கொடியை த.வெ.க பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது. த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என்று மனுதாரர் கூறுவதையும் ஏற்க முடியாது. சிவப்பு மஞ்சள் நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க முடியாது. எனவே இந்த கொடியை பயன்படுத்த இடைக்கால தடை கேட்ட மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
![]()





