கடையநல்லூர், நவ. 24:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டியில் இருந்து இன்று காலை தென்காசி எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.ராஜபாளையத்தில் இருந்து கே.எஸ்.ஆர் தனியார் பேருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தன. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் இடைகால் காமராஜர்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த இரண்டு பேருந்துகளும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் முன்பக்கம் அப்பளம் போல உடைந்தது. மேலும் இந்த இரண்டு பேருந்துகளும் வேகமாக இயக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதா?, கேஎஸ்ஆர் பேருந்து தடம் மாறி சென்றதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்றுள்ளதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()





