செய்திகள்

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன்

Makkal Kural Official

கடலூர், ஜூலை 9–

கடலூர் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள், போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த இடத்தை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

புதிய கேட் கீப்பர்

நியமனம்

இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

13 பேருக்கு சம்மன்

இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, வேன் டிரைவர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *