செய்திகள்

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்: விசாரணையில் தகவல்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 12–

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த கோர விபத்திற்கு யார் காரணம் என பல பேச்சுக்கள் தொடர்ந்து வந்தது. வேன் டிரைவர் அலட்சியமாக சென்றாரா அல்லது ரயில் கேட் கீப்பர் அலட்சியமா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருந்தது. படுகாயமடைந்த மாணவரும் கேட் திறந்திருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும், கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச் சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் என 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விபத்துக்கு கேட் கீப்பர்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், செம்மங்குப்பம் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துள்ளது.

ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணைக் ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்துள்ளார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா. விபத்துக்குப் பின், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, ‘கேட்டை மூடவில்லை’ என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. கேட் கீப்பரின் அலட்சியமே இந்த ரயில் விபத்துக்கு காரணம் என்பது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *