செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கை: கலெக்டர் சிபி ஆதித்யா வெளியிட்டார்

Makkal Kural Official

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் மூலம் 2025–-26 நிதியாண்டில் கடலூர் மாவட்டத்திற்கான ரூ.27,434.05 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,

2026–-27 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கானகடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் (ACP) ஒப்பிடும்போது 18% அதிகரிப்பாகும்.

பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் கொடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான திட்டங்களை அடிப்படையாக கொண்டு, அரசு அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் ரூ.22,281.92 கோடி (81.22%), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (எம்எஸ்எம்இ) மூலம் ரூ.3,002.88 கோடி (10.95%) மற்ற முக்கியத் துறைகள் மூலம் ரூ.2,149.25 கோடி (7.33%) எனவும் துறை வாரியாக கடன் திறன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

2026-27 ஆண்டிற்கான மாவட்ட கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும். மேலும், வங்கிகள் இத்திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.

கடலூர் மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட கடன் திறன், விவசாய வளர்ச்சி, சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில்முனைவோரின் முன்னேற்றம் மற்றும் மாவட்டத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆர்பிஐ உதவி தலைமை மேலாளர் ஆர்.ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் ச.சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சொர்ணலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *