செய்திகள் நாடும் நடப்பும்

கடலூர் கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

Makkal Kural Official

கடலூர், நவ. 17:

கடலூரில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.

72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கடலூர், நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பேசியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் வழிகாட்டுதலின்படி ஏழை விவசாயிகளின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுறவு வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. சிறந்த உலகத்தினை கூட்டுறவு அமைப்பு உருவாக்குகிறது என்ற அடிப்படையில் 2025ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு குறித்து ஏதேனும் ஒரு நல்ல கருப்பொருளுடன் கொண்டாடபட்டு வருகிறது. இந்த ஆண்டு “தன்னிறைவிற்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள்“ மற்றும் “கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி வழியே சிறப்பான மனித வளம்“ என்ற கருபொருளினை மையமாக கொண்டு 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2025 முதல் 20.11.2025 முடிய சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட கடனுதவிகள் மகளிர் மற்றும் ஆடவர் குழுக்கள் மூலம் கடன் வழங்குதல் டாப்செட்கோ, டாம்கோ மற்றும் தாட்கோ மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களிலும் கூட்டுறவு இயக்கம் சேவையாற்றி எளியமனிதனின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த சேவையாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணைமேயர் பா.தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தே.சொர்ணலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *