செய்திகள் நாடும் நடப்பும்

கடலூருக்கு வந்த உலக ஹாக்கி கோப்பை: அமைச்சர் கணேசன் காட்சிப்படுத்தினார்

Makkal Kural Official

கடலூர், நவ.23

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இளையோர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் வழங்கப்படும் கோப்பையினை விளையாட்டு வீரர்களுக்கு காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது:–

முதலமைச்சர் விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வெற்றிபெற்றிட வேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக இளையோர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோப்பையினை காட்சிப்படுத்தும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோப்பையானது கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர், குன்னூர், புளியம்பட்டி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி வழியாக இன்று (22.11.2025) நமது மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி போட்டியானது 1925 முதல் 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 8 முறை தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளது.

முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், உதவிகளை வழங்கி வருகிறார். ஆசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கண்ணகிநகர் கார்த்திகா அவர்களின் திறமையினை பாராட்டிடும் வகையில் ரூ.25 லட்சம் உதவித்தொகையினையும், அவருக்கு வீட்டிற்கான ஆணையினையும் வழங்கியுள்ளார். அவரை முன்மாதிரியாக கொண்டு விளையாட்டு வீரர்கள் உருவாகிட வேண்டும் என்பதற்காக கார்த்திகா பெயரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விளையாட்டானது உடலுக்கு வலுசேர்ப்பதுடன் மனஅழுத்தத்தினை குறைத்து, தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி அதிக புத்துணர்ச்சியுடன் செயல்பட விளையாட்டானது முக்கியமானதாகும். எனவே, தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *