செய்திகள்

கடலூரில் 1,027 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

Makkal Kural Official

கடலூர், ஜன.20–

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு உயர்கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் வழங்கிடும் வகையிலும், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களை போக்குவதற்காகவும், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், அவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புகளை பெற உதவும் வகையில் “உலகம் உங்கள் கையில்“ என்ற திட்டத்தின்கீழ் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8,228 மாணவர்களுக்கு ரூ.15.22 கோடி மதிப்பீட்டிலும், 3 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவர்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 கல்லூரிகளில் பயிலும் 9,051 மாணவர்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 171 மாணக்கர்களுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு பயிலும் 856 மாணக்கர்களுக்கும் என மொத்தம் 1,027 மாணவர்களுக்கு ரூ.1,89,99,500 மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 136 தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.

அரசினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகளை மாணவர்களாகிய நீங்கள் ஆன்லைன் வகுப்புகள், ஆராய்ச்சி, ப்ராஜெக்ட் வேலைகள், குறிப்புகள் எடுப்பதற்கும், எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் போது அலுவலகப் பணிகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, இம்மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கென வேலைவாய்ப்பினை பெற்று உங்களது வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைகழக துணைவேந்தர் சு.அறிவுடைநம்பி, பதிவாளர் இரா.சிங்காரவேல், இணைப் பதிவாளர் ஜெகதீஸ்வரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அ.மேரி கிறிஸ்டினா, துணை முதல்வர் மு.கிருபாநந்தினி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *