செய்திகள்

கடலூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

Makkal Kural Official

கடலூர், டிச. 20–

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு மிஷன், கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் கூட்டாண்மையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 3,712.62 சதுர கி.மீட்டரில் தற்போது 10.2 சதுர மீ மட்டுமே பசுமை பரப்பளவு உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள 33 சதவீத பசுமை பரப்பளவினை அதிகரித்திடும் வகையில் 10 ஆண்டுகளுக்கான விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் 5.5 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகள் மூலம் ஒருங்கிணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் 33 சதவீத பசுமை பரப்பளவினை விரைந்து எய்திடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா, மாவட்ட வன அலுவலர் குருசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *