கடலூர், ஜன. 19–
கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இரா.சுதன் பேசியதாவது:
முதலமைச்சர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான தொடக்க கல்வியினை வழங்கிடவும், இடைநிற்றலின்றி மாணவர்கள் கல்வி கற்றிடவும், பள்ளிக்கல்வியினை தொடர்ந்து சிறப்பான உயர்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெஇஇ போன்ற பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் போன்று மாவட்டங்களில் /வட்டாரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களிலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு JEE/NEET/CUET தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 212 வட்டாரங்களில் 272 பள்ளிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 21.01.2026 முதல் நடைப்பெறவுள்ள JEE தேர்வுகளை முன்னிட்டு வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் பயின்றுவரும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் 24.11.2025 அன்று தொடங்கப்பட்டு பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, இம்முகாமில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 181 மாணவிகளும், 223 மாணவர்களுக்கும் என மொத்தம் 404 மாணவ மாணவிகள் JEE தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், மேலாளர் மாதிரிப் பள்ளிகள்,வெற்றிப் பள்ளிகள் உமா, கடலூர் மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





