மோடி பாராட்டு
புதுடெல்லி, ஜூலை 27–
”ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,” என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
தொடர்ந்து நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசுவோம். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது முழு தேசமும் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்தது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ள தேசிய விண்வெளி தினம் குறித்து உங்களுக்கு யோசனை இருந்தால் நமோ செயலில் எனக்கு அனுப்புங்கள்.
மஹாராஷ்டிராவில் 12 கோட்டைகளை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இந்த கோட்டைகள் நமது சுயமரியாதையை வெளிப்படுத்துகின்றன. நாடு முழுவதும் பல கோட்டைகள் இருக்கிறது. இந்த கோட்டைகளை மக்கள் பார்வையிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தஞ்சாவூரை சேர்ந்த மணி மாறன் தமிழ் ஓலைச்சுவடிகளை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்தார். இதனால் இன்று பல மாணவர்கள் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது.
சில மாணவர்கள் இந்த கையெழுத்துப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். பண்டைய காலத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பின்னர் ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும்.
அங்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் அறிவியல் மரபுகளை கற்றுக்கொள்ள முடியும். இதனை கற்றுக்கொள்ள விரும்பினால் கலாச்சார அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இவை வெறும் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, இவை இந்தியாவின் அத்தியாயங்கள், நாம் வரும் தலைமுறையினருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசியதை கேட்ட மணிமாறன், அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பி.எச்.டி பட்டதாரி
மணிமாறன்
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலக தமிழ்பண்டிதர் மணிமாறன் (வயது 55). இவர் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார். சரஸ்வதி மஹால் நுாலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை திரட்டி 20 நூல்களை வெளியிட்டுள்ளார்.
![]()




