செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

Makkal Kural Official

சென்னை, டிச. 18:

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது.

அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது-

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணியின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது. 2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த டிசம்பர் 15-ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.

மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *