செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

Makkal Kural Official

உத்தரமேரூர். ஆக. 22–

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார்.

இதையடுத்து உத்திரமேரூர் தொகுதியில் எஸ்.பி சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் பேசியதாவது:–

சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்காங்க, அது ஒன்றரை வயதுக் குழந்தை. இது, அண்ணாத தி.மு.க. எழுச்சி பயணத்தில் 105வது கூட்டம். இதுவே மாநாடு போல் காட்சியளிக்கிறது. இரண்டு மாநாட்டுக்கே இப்படி என்றால், அண்ணா தி.மு.க. மக்கள் செல்வாக்குள்ள இயக்கம். எனவே, அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

நாங்கள் மக்களை சந்திக்கிறோம் என்றால், எம்ஜிஆர், அம்மா நாட்டை ஆண்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆண்டோம். இப்படி 31 ஆண்டுகள் அண்ணா தி.மு.க. ஆட்சி புரிந்திருக்கிறது. இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்.

எம்ஜிஆரும், அம்மாவும் பட்டிதொட்டியெங்கும் சென்று கட்சியை வளர்த்தனர். பல்வேறு சோதனைகளை வென்றுதான் ஆலமரம் போல தழைத்தோங்கி நிற்கிறது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் மக்களுக்குக் கொடுத்தோம்.

ஓட்டுக்காக கொடுக்கிறார்

ஒரு மாநிலம் வளர்ச்சி பெற உணவு உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெருக வேண்டும். இரண்டுமிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிமுக ஆட்சியில் சரியான பாதையில் சென்றோம். தி.மு.க. ஆட்சியின் 51 மாதத்தில் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்ததா? ஸ்டாலின் உரிமைத் தொகை கொடுப்பதாக தம்பட்டம் அடிக்கிறார். ஆனால், எப்போது கொடுத்தார்? அண்ணா தி.மு?க. சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன?

விவசாயிகளுக்காக அண்ணா தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம்,

நாட்டை சுரண்டும்

கருணாநிதி குடும்பம்

திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் இருக்கும் வரை அக்கட்சியில் யாரும் வரமுடியாது. ஏனென்றால் அது கார்ப்பரேட் கம்பெனி. மத்தியிலும், மாநிலத்திலும் குடும்பத்தினர்தான் இருப்பார்கள். நாட்டை சுரண்டும் கட்சி. அந்த ஒரு குடும்பம் நாட்டை சுரண்ட நாம் துணை நிற்க வேண்டுமா? ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணிச் செயலாளர், கனிமொழி மகளிரணி. இந்த மூன்றுதான் முக்கிய பதவிகள். மூன்றையும் ஒரே குடும்பமே பிரித்துக்கொண்டது. இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.

நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது தான் கிராமத்திலிருந்து நகரம் வரை அதிகமாக தார்சாலை அமைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அப்போது தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார், இந்தியாவிலேயே தார்சாலை அதிக நீளமுள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றோம்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே 42 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டது, 41 கோடி மதிப்பீட்டில் உத்திரமேரூர் தொகுதியில் 117 ஏரிகள் தூர்வாரப்பட்டது, 8 கோடி மதிப்பில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை, 8 கோடி மதிப்பில் எம்ஜிஆர் பெயரில் கலை அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது, பாலங்கள், கால்நடை மருந்தகம், அம்மா மினி கிளினிக் 10 அமைக்கப்பட்டது, மீண்டும் இத்திட்டம் தொடரும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *