செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்

Makkal Kural Official

ஹரியானா, அக். 14–

தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஹரியானாவில் காவல்பயிற்சி மைய ஐஜி பூரன்குமார்(52) கடந்த 7ம் தேதி தமது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார்.

ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா உள்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தம்மை ஜாதி ரீதியாக பாகுபாடு செய்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் மனரீதியான துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் அட்டூழியங்கள் போன்ற குற்றங்களை அவர் சாட்டியுள்ளார்.

இவரின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று இறந்துபோன பூரன்குமார் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத்குமார், சண்டிகர் போலீசில் புகார் அளித்தார்.

அவர்களைக் கைது செய்யக் கோரும் அதிகாரியின் குடும்பத்தினர், தங்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை பிரேதப் பரிசோதனை, உடல் தகனம் செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். ஐபிஎஸ் அதிகாரியின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு சண்டிகர் ஐஜி புஷ்பேந்திரகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது முக்கிய நடவடிக்கையாக டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் சண்டீகரில் உள்ள பூரன் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் பூரன் குமாரின் இல்லத்தை அடைந்த ராகுல் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பூரன் குமாரின் தற்கொலை தொடர்பாக ஹரியாணா அரசு மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *