செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஆக. 27–

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, திடீரென்று ஓய்வு அறிவித்துவிட்டு நாடு திரும்பினார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், சிறப்பாக செயல்படவில்லை. இதனால், சில போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009ஆம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது. பவர் பிளேவில் பந்துவீச வைக்கப்பட்ட நிலையில், அதில் அஸ்வினால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை. மேலும், பேட்டிங்கிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.

பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும். மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கும், இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *