செய்திகள்

ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் நியமனம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 29–

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பணியில் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.

ரகுராம் ராஜனுக்குப் பிறகு 2016ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் பணியாற்றினார். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி உர்ஜித் படேல் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே 2018 டிசம்பர் 10 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உர்ஜித் படேல் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. 1996–1997ம் ஆண்டு காலத்தில், அவர் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்தார். அங்கு கடன் சந்தையை மேம்படுத்துதல், வங்கித் துறையை சீர்திருத்துதல், ஓய்வூதிய நிதிகளைப் புதுப்பித்தல் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்குதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.

மேலும், 1998 முதல் 2001 வரை பொருளாதார விவகாரத் துறையின் கீழ் நிதி அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *