செய்திகள்

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

Makkal Kural Official

ஸ்ரீரங்கம், நவ. 10–

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் அழிக்க முடியாது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டேன். எஸ்ஐஆர் கொண்டு வந்து திமுகவை அழித்துவிடலாம் என எதிரிகள் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்கும் முயற்சி எடுபடாது. மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். தமிழ்நாட்டில் எடுபடாது. திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அண்ணா தி.மு.க. உள்ளது. எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்க துணிச்சல் இல்லை; டெல்லியில் இருக்கும் பிக்பாஸ்க்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம்சாமி போட்டுத்தான் ஆகணும்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அண்ணா தி.மு.க.வும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். கபட நாடகத்தை நடத்த அண்ணா தி.மு.க. திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அண்ணா தி.மு.க.வின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *