சென்னை, நவ. 11–
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலும், திருவள்ளூரில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:–
எஸ்ஐஆர்–ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் – களப் போராட்டம்–மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் – கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்! தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார்.
![]()





