திருப்பதி, நவ.1–
விண்ணில் நாளை ஏவப்பட உள்ள எல்விஎம்–3 எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்–3 அனுப்பிய எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது. இந்த திட்டம் வெற்றி அடைய, திருப்பதி கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்காக நாளை எல்விஎம் 3–எம்5 ராக்கெட் சிஎம்எஸ்–03 செயற்கைக்கோளை ஏவ இலக்கு வைத்துள்ளோம். சிஎம்எஸ்–03 ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும். செயற்கைக்கோள் ஏவுவதற்கு தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. நாளை மாலை 5.26 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
![]()





