செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது

Makkal Kural Official

சென்னை, ஆக. 21–

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக பணம் ரூ.31.88 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி (45) கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள் மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் மாதவன் என்பவரின் மனைவி ரம்யா (37) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மற்றும் சுகாதாரத்துறையில் மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், சுகாதாரத்துறையில் அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும் அவர்கள் மூலம் மனுதாரரின் மகளுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். மேலும் அதற்கு சுமார் ரூ.50 லட்சம் பணம் செலவாகும் என கூறி, புகார்தாரரை தேனாம்பேட்டையிலுள்ள டிஎம்எஸ் அலுவலகம் வரச்சொல்லி, எதிரி அந்தோணிதாஸ் என்பவரை டாக்டர் என்று அறிமுகம் செய்து வைத்து, புகார்தாரரை நம்ப வைத்து 8.02.2022 முதல் 19.5.2022 வரை பல தவணைகளாக ரூ.60,50,000 பணத்தை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றுள்ளனர்.

மேலும் புகார்தாரரின் மகளுக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்து விட்டதாக போலியான அட்மிஷன் ஆர்டரை காண்பித்து விடுதி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி மேலும் ரூ.1,38,000 பணத்தை எதிரி ரம்யா பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் வாங்கி தராமலும். புகார்தாரர் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இது சம்மந்தமாக புகார்தாரர் தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தவே, எதிரிகள் பல்வேறு தவணைகளாக ரூ.29,50,000 பணத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணம் ரூ.31,88,00 திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து ரோஸ்மேரி 27.08.2024ல் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு-3 உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ஏ.ராதிகா வழிகாட்டுதலின் பேரில் உதவி ஆணையாளர் காயத்ரி தலைமையில், மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமல் மோகன் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த ரம்யாவை கைது செய்தனர். விசாரணையில் ரம்யா மீது ஏற்கனவே ம பல கோடிகள் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி ரம்யா விசரணைக்குப் பின்னர் எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *