ஈரோடு, டிச. 18:
மக்களுக்காக புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி சென்றார். அங்கிருந்து சேலம் வழியாக கார் மூலம் சுமார் 67 கி.மீ. பயணம் செய்து விஜயமங்கலம் வந்தடைந்தார்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலையில் 9 மணி முதலே, கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான மக்கள் வரத் தொடங்கினர். இதுவரை தவெக பிரசாரக் கூட்டங்களில் இல்லாத வகையில், முன்னேற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.
அவர் பேசியதாவது:–
கடலென கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு விஜய் வருகை தந்துள்ளார்.
விஜய் மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக வரலாற்றில் மக்களுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்தவர்களில் புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதியை இன்று காண்கிறேன். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்று பலர் கனவு காணுவதாக அனைவரும் கூறினார்கள். ஆனால், நாளைக்கு ஆட்சிக்கு வரப் போவது புரட்சித் தளபதிதான்.
நல்ல தலைவர் வேண்டும் என்று மக்கள் பல நாள் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. 234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்.
என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்று பேசினார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டத்தைக் கூட்டி, தன் பலத்தை நிரூபித்துவிட்டார் கட்சியில் தற்போது இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
இந்த கூட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். ஒரு பகுதியினர், மற்றொரு பகுதிக்குள் சென்று நெரிசல் ஏற்படாத வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வெயில் கொளுத்துவதால் கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பறக்கும் டிரோன்கள், பேனர்கள், தவெக கொடி அமைக்கப்பட்டிருந்தது.
![]()





