செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் புதிய தொழில்நுட்பப் பாடங்கள் அறிமுகம்: அண்ணா பல்கலைக்கழகம்

Makkal Kural Official

சென்னை, ஆக.28-

மாணவர்கள் ஏ.ஐ., எந்திரக் கற்றல், தரவு அறிவியலில் சிறந்து விளங்க இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் என்ஜினீயரிங் மாணவர்கள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, ‘தயாரிப்பு மேம்பாட்டை’ முக்கிய குறிக்கோளாகக்கொண்டு ‘கேப்ஸ்டோன் வடிவமைப்பு திட்டம்’ 5-வது செமஸ்டரில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இதற்கான திட்டக்குழு பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு உருவாக்கப்படுவதால், இது அவர்களிடம் பல்துறை அணுகு முறையும் குழுவாக சேர்ந்து வேலை செய்யும் பண்பையும் ஊக்குவிக்கும்.

பாடத்திட்டத்தில் குறிப்பிடப் பட்டபடி, 5-வது செமஸ்டர் முதல் அறிமுகப்படுத்தப்படும் கேப்ஸ்டோன் வடிவமைப்பு திட்டங்களின் மூலம் பெறப்படும் மதிப்பெண்களையும் சேர்த்து, 8.5 அல்லது அதற்கு மேல் ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை பெற்றவர்களுக்கு என்ஜினீயரிங் பட்டத்துடன் கூடுதலாக சிறப்பு பட்டம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு ஆங்கில மொழி வளமையை மேம்படுத்து வது மட்டுமல்லாமல், இணைப்பு கல்லூரிகளில் வெளிநாட்டு மொழி பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், மாணவர்கள் ஜப்பானிய அல்லது ஜெர்மானிய அல்லது கொரிய மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படைத் திறன்களை கற்கவேண்டும்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ், முதல் ஆண்டிலிருந்தே பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர் களைக் கொண்ட குழுக்கள் உரு வாக்கப்படும். இந்தக் குழுக்கள் புதுமைப்பாங்கிற்கான மறு என்ஜினீயரிங் என்ற பாடத்தின்கீழ் செயல்முறைப் பயிற்சிகளை மேற் கொள்வார்கள். மேலும், மாணவர்கள் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை நடைமுறைகளை நன்கு அறிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு செமஸ்டர்களில் தொழில்துறை சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடங்கள், தொடர்புடைய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை சார்ந்த வல்லுநர்களால் கற்பிக்கப்படும்.

என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் படிக்கும் மாணவர் களுக்கு, கல்வி அடித்தளத்துடன் இணைந்து தொழில்நுட்ப, தொழில்முறை மற்றும் தனிநபர் திறன்களை மேம்படுத்து வதற்கான கட்டமைக்கப்பட்ட வாய்ப்புகள் தேவைப்படுகிறது. தற்போது, இத்தகைய பரந்த திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் திறன் மேம்பாட்டு பாடங்கள், தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பிற துறை சார்ந்த நிபுணர்களுடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பின்னர், இந்த திறன் மேம்பாட்டு பாடங்கள் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இளநிலை என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை, வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கும் ஏற்றவாறு, ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த பாடங்கள், பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் எந்திரக் கற்றல் (மெஷின் லேனிங்), தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற முன்னணி தொழில்நுட்பங்களில் அறிவு பெறுவார்கள். இந்தப் புதிய தொழில்நுட்பப்பாடங்களில் திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் நேரடி செயல்முறை பயிற்சிகள் கட்டாயமாக இடம்பெறும்.

உடற்கல்வி படிப்பு

தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்துடன் கூடுதலாக, இன்றைய என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ளவும், வெற்றிபெறவும், வளரவும் அத்தியா வசிய வாழ்க்கைத் திறன்கள் தேவை.

வாழ்க்கைத் திறன்கள் குறித்த படிப்புகள் முதல் இரண்டு செமஸ்டர்களில் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இதன்மூலம் மாணவர்கள் உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை எண்ணங்கள் போன்ற வற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். முதல்முறையாக, மாணவர்களின் விளையாட்டுத்திறனை வளர்க்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு உடற்தகுதியை மேம்படுத்தவும் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் உடற்கல்வி படிப்புகள் சேர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *