வாஷிங்டன், ஜூலை 19–
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் ஈடுபட்டன. பின்னர், இருநாட்டு தலைவர்களின் ஒப்புதலின்படி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றுமுதல், தனது தலையீட்டால் இருநாடுகளும் போர் நடவடிக்கைகளை கைவிட்டதாகவும், வர்த்தகத்தை வைத்து மிரட்டிதான் போர்நிறுத்தம் கொண்டு வந்ததாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இந்தக் கருத்துக்களை, முற்றிலும் மறுத்த இந்திய அரசு, இருநாடுகளின் ராணுவத்துக்கும் இடையிலான பேச்சுவாரத்தைகளினாலே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில், நிருபர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:– பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். வளர்ந்து வரும் பொருளாதார கூட்டமைப்பு வேகமாக மறைந்து வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. அவர்கள் விரைவில் முடிவுக்கு வருவார்கள்.
பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை. நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன. இரண்டு அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட நாடுகளும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டன. அது மேலும், வளர்ந்து கொண்டே சென்றது. ஆனால், அதை நாங்கள் வர்த்தகத்தை வைத்து முடிவுக்கு கொண்டு வந்தோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று கூறினோம். அது அணு ஆயுதங்களாகக் கூட இருக்கலாம். இரண்டுமே, அணுசக்தி ஆற்றல் கொண்ட நாடுகள்”.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், அந்த விமானங்கள் எந்த நாட்டுடையது என்பதை அவர் விவரிக்கவில்லை.
![]()





