செய்திகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

Makkal Kural Official

சென்னை, டிச.24-–

ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்! அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள். அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3 ஆயிரத்து 250 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்.

நீங்கள் எப்போதும்போல், நம்முடைய அரசின் சாதனை திட்டங்களை, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, நமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு நான் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும், இன்றைக்கு என்ன மாதிரியான அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சாதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கையும், உணர்வும் தி.மு.க.விற்கு தான் இருக்கிறது.

நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர – சகோதரிகளாக நினைக்கும் மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.

உங்களுக்குத் துணையாக தி.மு.க.வும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு, மீண்டும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து, விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், சிறுபான்மையர் ஆணையத் தலைவர் பாதிரியார் ஜோ.அருண், டான்போஸ்கோ பள்ளி தாளாளர் பாதிரியார் ஜோசப் லியோ, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தலைவர் பாதிரியார் கிறிஸ்டியன் சாம்ராஜ், ஆற்காடு லூத்தரன் திருச்சபை பாதிரியார் டி.பீட்டர் பால், இ.சி.ஐ. சென்னை பேராயர் கதிரொளி மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *