சென்னை, ஜன. 24–
எந்த நேரத்திலும், எதுவும் மாறும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது? என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து பிரேமலதா கூறுகையில், தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம். எல்லோரும் தொகுதி அறிவித்துவிட்டார்களா?, வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார்களா?. தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பிப்ரவரி 28–ந்தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். தே.மு.தி.க. எங்களது குழந்தை. அவர்களுக்கு என்ன, எப்பொழுது நல்லது பண்ண வேண்டும் என்று ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்பு அதிகமாக இருக்கிறது.
உரிய நேரத்தில் எல்லோரும் போற்றும் ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் தினமும் ஒரு செய்தியை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக பல முறை கூறி உள்ளேன். உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம். ரகசியம் ஏதும் கிடையாது. இந்த முறை வெளிப்படையாக தான் கூட்டணி அமைப்போம். கூட்டணி முடிவு செய்யப்பட்டால் முதலில் மீடியாக்களை அழைத்து அறிவிப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்தும் இறுதி முடிவு எடுக்கவில்லை.எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம். யார் வேண்டும் என்றாலும் எந்த கூட்டணியும் அமைக்கலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில், தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவு எடுப்போம். தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வர தான் போகிறது. 2026ல் நல்ல ஆட்சி அமைய வேண்டும். அது தான் எங்களது கோரிக்கை நல்லதே நடக்கும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
![]()





